Saturday, June 25, 2016

Surrender to Nature / சரணாகதி

மகாசக்தி 





                           




ஆசிரியர் : ஹீலர் ப. பிரதாப் B.E., B.Acu.,M.Acu., Ad.Acu.,B.Ed(Acu)
pradap_p@yahoo.com

சரணாகதி

"சரணாகதி" என்பதன் பொருள் நம்மை நாம் இயற்கையிடம்மகாசக்தியிடம் ஒப்படைப்பது. நம் அன்றாட தேவைகளுக்கான முடிவுகளை இயற்கை எடுக்க நாம் அதை அப்படியே பின்பற்றுவது. இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் சிறை கைதிகள். தவறு செய்தவர்கள் தங்கள் தவறை தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டால் அவர்களை "சரண் அடைந்துவிட்டார்கள்" என்கிறோம். அதாவது அவர்கள் தங்களை சட்டத்தின் முன் ஒப்படைத்துவிட்டார்கள் என்று பொருள். சிறையில் சிறை அலுவலர்கள் குறித்த நேரத்தில் தான் சிறை கைதிகள் தூங்க வேண்டும்; சாப்பிட வேண்டும். கைதிகள் தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க முடியாது. சிறை அலுவலர்கள் கூறுவதை கேட்டு அப்படியே நடக்க வேண்டும்; மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதுவே சரணாகதி. 

இதைப் போல் நம் வாழ்க்கையில் இயற்கையாக நடப்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த விதமான திட்டமும் தீட்டக் கூடாது; முடிவும் செய்யக் கூடாது. தவறானவற்றை, செயற்கையாக மனிதர்களால் உருவாக்கியதை ஏற்றுக்கொள்வது சரணாகதி ஆகாது.
ஒருவர் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான எண்ணம் மட்டும் இருந்தால் போதும்; பயணச்சீட்டு முன்பதிவு செய்வது போன்ற மற்ற விஷயங்கள் எந்தவித தடங்கலும் இன்றி நடக்கும். ஒரு வேளை நமக்கு பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்றால் இயற்கை நம்மை அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று பொருள் (தடங்கல் ஏற்படுவதால்). அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் சரணாகதி. அப்படியல்லாமல் வேறு ஏதாவது ஒரு விதத்தில் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டால் அது இயற்கையை மீறிய செயலாகும்; சரணாகதியாகாது. இதனால் நாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

இயற்கையின் சக்தியால் படைக்கப்பட்ட படைப்புகளில் மனிதனும் ஒரு படைப்பு. மனிதன் தான் மேன்மையான படைப்பு ஆறாவது அறிவான
பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் தான் உள்ளது என்று மனித இனம் பெருமை கொள்வது தவறான செயல். இந்த எண்ணங்கள் தான் சிக்கலை ஏற்படுத்துகிறது. மனிதன் தான் மேன்மையான படைப்பு என்று மனித இனத்திற்குள்ளேயே பெருமை கொள்கிறானே தவிர இது மற்ற இனங்களான விலங்குகள், பறவைகள், மரங்கள், தாவரங்கள் இவற்றிற்கு தெரியாது. அதனால் இந்த இனங்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. மனிதன் தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்றும் தான் மட்டும் தான் மேன்மையான படைப்பு என்றும் எண்ணி மற்ற இனங்களை அடக்கி ஆள நினைக்கிறான். எல்லாவற்றையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள நினைக்கிறான். இயற்கையையே மாற்றி அமைக்க எண்ணுகிறான். இதன் விளைவு தான் இயற்கை பேரழிவுகள். ஒரு அளவுக்கு மேல் போன பிறகு இயற்கை மனிதனை அடக்குகிறது. இயற்கையை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்று மனிதனுக்கு உணர்த்துகிறது.

மனிதன் தன் அன்றாட வாழ்வில் இயற்கையை மீறி பல செயல்களை செய்கிறான். உதாரணத்திற்கு இயற்கையாக நரைக்கும் (வெள்ளையாகும்) முடிக்கு கருப்பு வண்ணம் பூசுவது. பிறக்கும் போது அனைவருக்கும் முடி கருமையாக இருக்கும். உடல் இயற்கையை ஒட்டியே இருக்கும். செயற்கை பொருட்கள் கலக்காமல் தூய்மையாக இருக்கும். உடலின் சூடும் தேவைக்கேற்ப இருக்கும். குழந்தை வளரும் போது நிறைய மருந்து மாத்திரைகள் (நோய் குணமாகும் என்ற எண்ணத்தில்) சாப்பிடுகின்றனர். அதனால் உடல் சூடு அதிகமாகிறது. சூடு அதிகமாவதால் உணர்ச்சிகளும் அதிகமாகின்றன. பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பொய் கூறுவது, பொறாமைப்படுவது, பெருமைப்படுவது இவையாவும் கெட்ட பழக்கங்களே. இதனால் உடல் சூடு மேலும் அதிகமாகி சிறுநீரகத்தை அடைகிறது. 

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுடி உள்ளது. தலைமுடியின் நிறம் அவை வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். மனிதனுக்கு உடலில் (சிறுநீரகத்தில்) உள்ள சூடு அதிக அளவில் தலை வழியாக வெளியேறுகிறது. இந்த சூட்டிற்கு ஏற்றவாறு தலைமுடியின் நிறம் மாற்றம் பெறும். இது இயற்கையாக நடக்கும் செயல். குளிர்நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் வாழும் மனிதர்களின் முடி கருமையாக இல்லாமல் சற்று பழுப்பு நிறத்துடனும் மற்றும் வெள்ளை நிறத்துடனும் காணப்படும். ஏனென்றால் அவர்கள் குளிர் நாடுகளில் இருப்பதால் வியர்வை வருவதில்லை. உடம்பபின் சூடு வியர்வை மூலமாக வெளியேற வாய்ப்பில்லை. தலை முடி கருமையாக இருந்தால், அந்த கருப்பு நிறம் வழியாக மேலும் சூடு உடலில் ஊடுருவும். இது உடலுக்கு கேட்டை விளைவிக்கும். இதைத் தடுப்பதற்காக அவர்களின் தலைமுடி கருமையாக இல்லாமல் பழுப்பு/வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. வெள்ளை நிறத்தின் தன்மை அதன் மேல் படும் சூட்டை உள்ளே இழுக்காமல் திருப்பி விடுவது. 

நம் நாடு சூடான நாடு; இந்த சூட்டினால் வியர்வை உருவாகி உடல் சூடு தணிந்தே காணப்படும். அதனால் இங்குள்ளவர்களுக்கு தலைமுடி இயற்கையில் சிறு வயதிலிருந்தே கருமையாக காணப்படும். ஆனால் வயது ஆகஆக நாம் செய்யும் தவறுகளாலும் உட்கொள்ளும் உணவுகளாலும் சிறுநீரகத்தில் சூடு அதிகமாகும். இது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக முடி கருமை நிறத்திலிருந்து வெள்ளையாக மாறுகிறது. நம் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. நாம் இந்த இயற்கையை மீறி தலைமுடிக்கு கருப்பு வண்ணம் பூசும் போது தலை வழியாக சூடு உடலினுள் சேர்கிறது. இது சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குழந்தைப்பேறும் பாதிக்கப்படுகிறது. 

தலை முடியை சிறுநீரகம் தான் பாதுகாக்கிறது. கருப்பு நிற முடியால் மேலும் சூடு தலைக்குள் இறங்காமல் இருப்பதற்காக சிறுநீரகம் முடியை நரைக்க (வெள்ளை) செய்கிறது. வெள்ளை நிறத்தின் தன்மை அதன் மேல் படும் சூட்டை திருப்பிவிடுவது. சூட்டை அது உள்ளே இழுக்காது. இதனால் உடல்/சிறுநீரகம் மேலும் சூடாகாமல் தடுக்கப்படும். முடி நரை, உடல் தன்னை பாதுகாக்க செய்யும் ஒரு செயல். அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்லது. அதை விட்டு முடியை திரும்பவும் கருப்பாக்க வண்ணம் பூசுவது மிகவும் தவறான செயல். இயற்கையை மீறிய செயல். நமக்கு மேலும் தீமை உண்டாகும். முடியை நாம் செயற்கையாக கருமையாக்கும் போது சிறுநீரகத்தின் சூடு அதிகரிக்கிறது. சிறுநீரகம் இன்னும் சில முடிகளை நரைக்கச் செய்கிறது. இது தொடரும் போது முதலில் சில முடிகள் மட்டுமே வெள்ளையாக இருந்தது கடைசியில் முடிகள் முழுவதும் வெள்ளையாகும். அதையும் மீறி நாம் கருப்பு வண்ணம் பூசும் போது சூடு அதிகமாகி மூளை கட்டி வர வாய்ப்புள்ளது. சூட்டுக் கொப்பளங்கள் வரலாம்.

தலையில் முடிகள் அனைத்தும் கொட்டுவதும் (வழுக்கை) இதே காரணத்தினால் தான். சிறுநீரகத்தில் சூடு மிக அதிகமாக உள்ளது என்று பொருள். தலையில் முடிகள் இல்லாமல் இருந்தால் உடலின் சூடு தலை வழியாக அதிகமாக வெளியேறும். அது உடலுக்கு நல்லது. தலையில் வழுக்கை விழுந்தால் நாம் செயற்கை முறையில் முடி வளர பல மருத்துவ முறைகளை தேர்ந்தெடுக்கிறோம். இவை அனைத்தும் தவறு. நரை முடியும், தலை வழுக்கையும் அப்படியே விட்டுவிட்டு நாம் பொறுமையாக இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக கருமை நிறம் திரும்பவும் வரும்; வழுக்கைத் தலையில் முடி வளரும். இவையாவும் நாம் சரணாகதி அடைந்தால் மட்டுமே நிகழும். தலைக்கு தொப்பி, தலைக்கவசம் அணிவதும் தவறு. சூடு வெளியே போகாமல் உள்ளேயே தங்கி உடல் நலம் கெடும். 

மற்றவர்களுக்காக வாழ்க்கை வாழ்வதை விட வேண்டும். (கருப்பு நிறம் பூசுவது மற்றவர்கள் நம்மை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காக; பொய் பேசுவதும் மற்றவர்களுக்காக) நமக்காக வாழ பழக வேண்டும். திருமணத்தை ஆடம்பரமாக செய்வது (மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக), அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுப்பது, இவை அனைத்தும் இயற்கையை மீறிய செயல் தான். இயற்கையுடன் ஒத்து வாழ வேண்டும். நாம் வாழும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். நம் மண்ணீரல் அப்போது தான் சக்தியோடு இருக்கும். உண்ணும் உணவு நல்ல ஜீரணம் ஆகும். நாம் ஆரோகியமாக இருக்கலாம். 

நாம் சரணாகதி என்ற நிலையை அடையும் போது நம் தேவையெல்லாம் அப்படியே பூர்த்தியாகும். எதற்காகவும் கஷ்டப்பட வேண்டாம். நினைத்த நல்லது யாவும் அப்படியே நடக்கும். எதைப் பற்றியும் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தாலும் எல்லா செயல்களும் நமக்கு சாதகமாகவே நடக்கும். நமக்கு வெளியில் இருக்கும் போது பசி எடுத்தால், நல்ல உணவு வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நல்ல உணவு கிடைக்கும் (நல்ல உணவகத்திலோ அல்லது தற்செயலாக சந்திக்கும் நண்பர்/உறவினர் வீட்டிலோ). தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். நாம் அழுக்கு தண்ணீரை (மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல்) குடித்தால் கூட நமக்கு நோய் வராது. அழுக்கு தண்ணீரை நல்ல தண்ணீராக நம் உடல் மாற்றும். அந்த சக்தி நம் உடலுக்கு உள்ளது. வெளியில் இருக்கும் போது தூங்க வேண்டும் என்று நினைத்தால் கூட தூங்குவதற்கான இடம் கிடைக்கும்.

ஒரு ஊருக்கு புதிதாக செல்லும் போது ஒருவரிடம் வழி கேட்கலாம். அது இயல்பு. அதே வழியை இரண்டாமவரிடமும் கேட்டு அதைப்பற்றி யோசிப்பது தவறு. இந்த யோசிக்கும் தன்மை விலங்குகளிடமோ அல்லது மற்ற இனங்களிடமோ இல்லை. அவை இயற்கையை ஒட்டி வாழ்கின்றன. அவைகளுடைய தேவை [உணவு, தூக்கம் (உடுக்க உடை மனிதன் செயற்கையாக உருவாக்கியது)] யாவும் கஷ்டமில்லாமல் அவைகள் உயிர் வாழும் வரையிலும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதுவே சரணாகதி. இவர்களின் தேவைக்காகவே இயற்கை வேலை செய்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லையென்றால் உடனே மழை பொழிகிறது. 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயற்கை அனுமதித்தால் மட்டுமே செய்யமுடியும். இயற்கைக்கு எதிராக எந்த செயலையும் செய்ய முடியாது. ஒன்று, இரண்டு முறை இயற்கையை மீறிய செயலை செய்தாலும் அளவுக்கு அதிகமாக போகும் போது இயற்கை நம்மை அடக்கிவிடும். இதுவே நீதி. நாம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ இயற்கையின் (பஞ்சபூதங்களின் - நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ) அனுமதி கட்டாயம் தேவை. நாம் இயற்கையின் முன் சரணாகதி அடைந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்.



நாம் நம்மை இயற்கையிடம்மகாசக்தியிடம் ஒப்படைப்போம். அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். சரணாகதி அடைவோம். வாழ்க்கையில் நமக்கு வேண்டிய அனைத்து தேவைகளும் மிக எளிமையாகவும் கஷ்டங்கள் இல்லாமலும் கண்டிப்பாக கிடைக்கும் . 

இயற்கையே(சக்தியே) சரணம் 



No comments:

Post a Comment